வலியறிதல்

குறள் 471: வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியுந் தூக்கிச் செயல் மு.வ உரை: செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். சாலமன் பாப்பையா உரை: செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க. கலைஞர் உரை: செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்

குறள் 472: ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாத தில் மு.வ உரை: தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை. சாலமன் பாப்பையா உரை: தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை. கலைஞர் உரை: ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை

குறள் 472: ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாத தில் மு.வ உரை: தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை. சாலமன் பாப்பையா உரை: தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை. கலைஞர் உரை: ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை

குறள் 474: அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும் மு.வ உரை: மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான். சாலமன் பாப்பையா உரை: பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான். கலைஞர் உரை: மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்

குறள் 475: பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின் மு.வ உரை: மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும். சாலமன் பாப்பையா உரை: மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும். கலைஞர் உரை: மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்

குறள் 476: நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் மு.வ உரை: ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும். சாலமன் பாப்பையா உரை: ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும். கலைஞர் உரை: தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்

குறள் 477: ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள் போற்றி வழங்கு நெறி மு.வ உரை: தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும். சாலமன் பாப்பையா உரை: எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும். கலைஞர் உரை: வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்

குறள் 478: ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை மு.வ உரை: பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை. சாலமன் பாப்பையா உரை: வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை. கலைஞர் உரை: எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை

குறள் 479: அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் மு.வ உரை: பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும். சாலமன் பாப்பையா உரை: தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும். கலைஞர் உரை: இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்

குறள் 480: உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும் மு.வ உரை: தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும். சாலமன் பாப்பையா உரை: பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும். கலைஞர் உரை: தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்