படைச் செருக்கு

குறள் 771: என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கல்நின் றவர் மு. உரை: பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர். சாலமன் பாப்பையா உரை: பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர். கலைஞர் உரை: போர்களத்து வீரன் ஒருவன், ``பகைவயர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்'' என முழங்குகிறான்

குறள் 772: கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது மு. உரை: காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது. சாலமன் பாப்பையா உரை: காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது. கலைஞர் உரை: வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது

குறள் 773: பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு மு. உரை: பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர். சாலமன் பாப்பையா உரை: பகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும். கலைஞர் உரை: பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும் அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்

குறள் 774: கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும் மு. உரை: கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான். சாலமன் பாப்பையா உரை: தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான். கலைஞர் உரை: கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாயந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்

குறள் 775: விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஓட்டன்றோ வன்க ணவர்க்கு மு. உரை: பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ. சாலமன் பாப்பையா உரை: பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும். கலைஞர் உரை: களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்

குறள் 776: விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்குந்தன் நாளை எடுத்து மு. உரை: வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான். சாலமன் பாப்பையா உரை: ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான் கலைஞர் உரை: ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்

குறள் 777: சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து மு. உரை: பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும். சாலமன் பாப்பையா உரை: தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே. கலைஞர் உரை: சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்

குறள் 778: உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினுஞ்சீர் குன்றல் இலர் மு. உரை: போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர். சாலமன் பாப்பையா உரை: போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார். கலைஞர் உரை: தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்

குறள் 779: இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர் மு. உரை: தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார். சாலமன் பாப்பையா உரை: தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்? கலைஞர் உரை: சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது

குறள் 780: புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா டிரந்துகோட் டக்க துடைத்து மு. உரை: தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும். சாலமன் பாப்பையா உரை: வீரர்களின் வீரச்செயலை எல்லாம் எண்ணிப் பார்க்கும் கண்களோடு ஆட்சியாளர் நிற்க, அந்தப்போரில் சாகும் வாய்ப்பைப் பெற்றவரின் சாவு, பிறரிடம் கேட்டுப் பெறத்தக்க சிறப்பினை உடையது. கலைஞர் உரை: தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு