tamil you

தமிழ்மொழி

உலகில் ஆயிரகணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லாத காரணத்தால் அவை பயன்பாட்டில் இல்லை.ஆனால் அவற்றில் சில மொழிகள் மட்டுமே மிகத் தொன்மையானதாகவும் சிறந்த இலக்கியப் பிண்ணனி கொண்டவையாகவும் இருக்கின்றன. இவற்றில் சில மொழிகளை செம்மொழிகள் எனக் கருதுகிறார்கள். செம்மொழி என்பது மக்கள் பயன்பாட்டில் உள்ள தொன்மையான மொழியைக் குறிக்கும்.

உலகளவில் எட்டு மொழிகள்  செம்மொழிகளாகக் கருதப்படுகின்றன.

  1. சமஸ்கிருதம்
  2. கிரேக்கம்
  3. இலத்தீன்
  4. பாரசீகம்
  5. அரபு மொழி
  6. எபிரேயம்
  7. சீனம்
  8. தமிழ்

தென்னிந்தியாவில் தோன்றிய தமிழ் மொழி திராவிடப் பண்பாட்டின் பிரதிபலிப்பு. தமிழ் தமிழர்களின் தாய்மொழி மட்டுமல்லாது இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாகும். இந்திய மொழிகளில் தமிழ் மிகப் பழமையான இலக்கண இலக்கிய மரபுகளை உடையது.

தமிழறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றை ஐந்து காலப்பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

  1. சங்க காலம்
  2. சங்கம் மருவிய காலம்
  3. பக்தி இலக்கிய காலம்
  4. மத்திய காலம்
  5. இக்காலம்

தமிழ் இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டிலும் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலும் பேசப்படுகிறது. தமிழ் இலங்கையின் மூன்று ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் சிங்கப்பூரின் தேசிய மொழிகளில் ஒன்றாகவும் அங்கீகாரம் பெற்றுள்ளது. தமிழுக்கு தென்னாப்பிரிக்காவிலும் அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது.

தமிழ் மொழியின் எழுத்து வடிவங்கள் எந்தக் காலத்தில் தோன்றியது என்பது ஒரு கேள்விக்குறியாவே உள்ளது. இந்தக்காலத்தில்தான் தோன்றியது என்று உறுதியாகக் கூற முடியாத நிலையில்தான் நம் தமிழறிஞர்கள் உள்ளனர். பழங்காலத்தில், நாம் இன்று கையாளும் தமிழ் எழுத்தல்லாத, வேறு நான்கு வகையான தமிழ் வரி வடிவங்களில் தமிழ்மொழியை எழுதப் பயன்படுத்தி உள்ளனர் என்பதைத் தெளிவாக உணர முடிகிறது.


1. தென்பிராமி அல்லது தமிழ்ப் பிராமி
2. வட்டெழுத்துக்கள்
3. கோலெழுதுக்கள் மற்றும்
4. மலையாண்மை

தமிழ் மொழியின் எழுத்து வடிவங்களில் மிகமிகத் தொன்மை வாய்ந்தது வட்டெழுத்து முறை. வளைந்த கோடுகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால் அம்முறை வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது. இதன் அடிப்படையில் சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் கோலெழுத்துக்கள் அல்லது “மலையாண்மா” என்ற எழுத்து முறை உருவானது. இக்கோலெழுத்துகள் செப்பேடுகளிலும் ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்டன. அக்கோலெழுத்துக்களே ஆங்காங்கே கிடைத்துள்ள கல்வெட்டுக்களிலும், நடு கற்களிலும் தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்தாக உருமாறி மலர்ந்து வளர்ந்தது என இரா. நாகசாமி அவர்கள் மார்தட்டிக் கூறுகிறார்.

தமிழ் குறைந்தது இரண்டாயிரம் வருடங்கள் இலக்கிய வளமும் தொடர்ச்சியும் கொண்டது. எனினும், தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவை இன்பியல் இலக்கியங்களே. இது "இலக்கிய வளர்ச்சி அரசர்களையும் குறுநில மன்னர்களையும் சுற்றி வந்ததால்" ஏற்பட்டிருக்கலாம். அதன் விளைவாக இலக்கியம் என்ற சொல் தமிழில் இன்பியல் இலக்கியத்தையே பெரும்பாலும் குறித்து நிற்கின்றது. சிறுகதை, நாவல், கவிதை, நாடகம் ஆகிய எழுத்துக் கலை வடிவங்களே இன்று தமிழ் இலக்கியம் என பொதுவாக கருதப்படுகின்றது.
தமிழ் மொழி, இயல், இசை மற்றும் நாடகம் என மூன்று பிரிவுகளை உடையது. இவையே தமிழை முத்தமிழ் என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. நம் முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,

1. எழுத்து
2. சொல்
3. பொருள்
4. யாப்பு
5. அணி

அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று இலக்கணம் என்றும் ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.
 
 




Untitled Document
Untitled Document
Tamilyou.com©2011