அதிகாரம் 2: வான்சிறப்பு
குறள் 1: வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. விளக்கம்: உரிய காலத்தில் மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வாழ்ந்து வருகிறது. அதனால் மழையே உலகத்தில் வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என உணரத்தக்கது. குறள் 2: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. விளக்கம்: தூய அறிவின் வடிவான கடவுளின் திருவடிகளை வணங்காமல் இருப்பாரானால், அவர் பெற்ற கல்வியறிவினால் ஒரு பயனும் இல்லை. குறள் 3: விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. விளக்கம்: உரிய காலத்தில் மழை பெய்யாமல் பொய்த்துவிட்டால் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் வாழும் உயிர்களை பசியின் கொடுமை வாட்டி வதைக்கும். குறள் 4: ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். விளக்கம்: மழை எனும் வருவாய் வளம் குறைந்துவிட்டால், உணவுப் பொருட்களை விளைவிக்கும் உழவரும் ஏரால் உழவு செய்யமாட்டார். குறள் 5: கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. விளக்கம்: பெய்யாமல் விட்டு உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியது மழை; மழையில்லாமல் வளம் கெட்டவர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்க்கக்கூடியதும் மழையாகும். குறள் 6: விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது விளக்கம்: வானத்திலிருந்து பெய்யும் மழை பொய்த்துப் போனால் இவ்வுலகத்தில் பசும்புல்லின் நுனியைக் காண்பதுகூட அரிதாகிவிடும். குறள் 7: நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் விளக்கம்: மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் பெரிய கடலும் வளம் குன்றாமல் இருக்கும். குறள் 8: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு விளக்கம்: மழை பெய்யாமல் வானம் பொய்த்துவிட்டால் இவ்வுலகில் வானோர்க்கு நடைபெறும் தின வழிபாடும் நடைபெறாது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது. குறள் 9: தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின் விளக்கம்: இப்பேருலகில் மழை பெய்யாமல் பொய்த்துவிட்டால், பிறர் பொருட்டு செய்யும் தானமும் இருக்காது; தன் பொருட்டு செய்யும் தவமும் இருக்காது. குறள் 10: நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. விளக்கம்: எப்படிப்பட்டவர்க்கும் நீரின்றி உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை பொய்த்துவிட்டால் இவ்வுலகில் ஒழுக்கமே கெடக்கூடும். |
|
